டெல்லி: ‘மோடி’ பெயர் குறித்து பேசிய ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில், அவரது சிறை தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட  ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வரும் (ஜூலை)  21ஆம் தேதி விசாரிக்கிறது

கிரிமினல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான தண்டனை மற்றும் 2ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2019ம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது,  பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்தார். மோடி என்பது குஜராத்தில் ஒரு சாரார் பெயருடன் இணைந்து வரும் சமூக அடைமொழியாகும். இதனால், தங்களது மொத்த சமூகத்தையே ராகுல் இழிவுபடுத்தி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர், சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுலின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்த மனுவும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு  தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும் ராகுல்மீது,  மேலும் சில வழக்குகள் உள்ளன. வீர்சவர்காரின் பேரன் ஒருவரும் அவர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். என்றாலும் தண்டனையில் எந்த அநீதியும் இல்லை. முற்றிலும் இல்லாத காரணங்களுக்காக ராகுல் தடை கோரி வருகிறார். தண்டனையை நிறுத்தி வைப்பது விதி அல்ல. விதிவிலக்கு” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் மேல் முறையீட்டை சூரத் ஷெசன் நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு வரும் 21ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. இதற்கிடையில்,   ராகுல் காந்தியோ அல்லது அவர் சார்பிலோ குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தால், அதில் தனது தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று புர்னேஷ் மோடி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.