பீட்டா விருதை திரும்ப ஒப்படைக்க கோரி நீதிபதி மீது வழக்கு……..உச்சநீதிமன்றம் தடை

Must read

டெல்லி:

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. பீட்டா அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தான் இந்த தீர்ப்பை வழங்கினார்.

இதற்கு மாறாக தற்போது தமிழத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு ஜலல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருவது வேறு கதை. ஆனால் இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ராதாகிருஷ்ணன் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார். இவருக்கு கடந்த 2015ம் ஆண்டின் ‘சிறந்த மனிதர்’ என்ற விருதை பீட்டா வழங்கியது.

இந்த விருதை திருப்பி கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று சாலை சக்ரபாணி என்பவர் மதுரை உயர்மன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். அதோடு இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

தலைமை நீதிபதி கேஹர், நீதிபதி ராமண்னா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரித்தது. மூத்த வக்கீல்கள் சித்தார்த் லுத்ரா, சிவ்சங்கர் பனிக்கர் ஆகியோர் ஆஜராக வாதாடினர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும், உயர்நீதிமன்ற நோட்டீசுக்கும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More articles

Latest article