டெல்லி: மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் நீதிபதி (ஓய்வு) கீதா மிட்டல் தலைமையிலான குழு மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை அறிக்கையை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டது மற்றும் வழக்கில் அவரது உதவியை நாடி உள்ளது.

பாஜக முதல்வர் பைரேன் சிங் தலைமையில், ஆட்சி நடக்கும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், மே 3ம் தேதி முதல், இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி – கூகி பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக, 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக் கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  அதைத்தொடர்ந்து உச்சபட்சமாக இளம்பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கலவரம் குறித்து உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியையும் தெரிவித்தது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து விட்டது’ என தெரிவித்து, ஆகஸ்டு மாதம் 7ந்தேதி  அம்மாநில டி.ஜி.பி., நேரில் ஆஜராக உத்தரவிட்டது.  அதையடுத்து அடுத்தக்கட்ட விசாரணையின்போது, மணிப்பூர் டி.ஜி.பி., ராஜிவ் சிங் நேரில் ஆஜரானார்.

மத்திய – மாநில அரசுகள் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர், இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சி.பி.ஐ.,க்கு வழக்குகளை மாற்றியது உள்ளிட்ட விபரங்கள் தொடர்பாக பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து கூறிய நீதிபதிகள்,  மணிப்பூரில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை மேற்கொள்ள, ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இதில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஷாலினி பி ஜோஷி, ஆஷா மேனன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுக்களால் விசாரிக்கப்படும் வழக்குகளை மூத்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் குழு மணிப்பூர் சென்று விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் நிவாரணப் பணிகள், மறுவாழ்வு, இழப்பீடு மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட நீதிபதி (ஓய்வு) கீதா மிட்டல் தலைமையிலான குழுவின் சரியான செயல்பாட்டை எளிதாக்க ஆகஸ்ட் 25 ஆம் தேதி உத்தரவிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிர்வாக உதவி, குழுவின் நிதிச் செலவுகள் போன்றவற்றுக்கு சில நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

கமிட்டி தாக்கல் செய்த மூன்று அறிக்கைகள் வழக்கின் வக்கீல்களுக்கு அளிக்கப்படும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்ய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை  அறிவுறத்தி உள்ளது.