சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்: உச்சநீதி மன்றம் நிராகரிப்பு!

Must read

டில்லி:

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டதாக மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக  திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமாக பதில் தெரிவித்து உள்ளார். அதுபோல மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்பி எழுப்பிய கேள்விக்கும் இதே பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தமிழ்மொழி அனைத்து மட்டத்திலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ்  இருக்க வேண்டும் என்றும் கடந்த 15 ஆண்டு களுக்கு முன்பே தமிழக  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில்,  இன்னும் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது.

தமிழை நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று பல முறை வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியும், இதுவரை நடைமுறைப்படுத்தப் படாமல் உள்ளது.

இந்த நிலையில், திமுக மக்களவை உறுப்பினர், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டதாக மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்து உள்ளார். மேலும்,  கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பெங்காலியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக  கூறினார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்.பியும் இந்த கேள்வி எழுப்பினார். அதற்கு  மத்திய சட்டத்துறை இணை மந்திரி சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை ஐகோர்ட்டில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசிடம் இருந்து 2006-ம் ஆண்டு கோரிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், இந்த பரிந்துரையை ஏற்கமுடியாது என சுப்ரீம் கோர்ட் அனைத்து நீதிபதிகள் அமர்வு 11-10-2012 அன்று அறிவித்தது. கடந்த 1997 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் இதே போன்ற கோரிக்கை எழுந்த போது அதனை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இதனால், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில், மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பிராந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் பணி நடைமுறையில் இருக்கிறது. இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் உள்பட 9 பிராந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அவை நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

More articles

Latest article