டெல்லி:  ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு தேர்வுக்கு கிரேடு மதிப்பெண் முறை சரியானதே என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவித்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை மத்தியஅரசு ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கப்படுவதாக அறிவித்தது. அதன்படி, 10ம் வகுப்பில் இருந்து 30% மதிப்பெண்ணும், 11ம் வகுப்பில் இருந்து 30% மதிப்பெண்ணும், 12ம் வகுப்பில் இருந்து 40% மதிப்பெண்ணும் வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்தது.

இதற்கு மாணாக்கர்கள் பெற்றோர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. வாரியத் தேர்வுகளை ரத்து செய்த பின்னர் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மதிப்பீடு செய்வதற்காக சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ ஏற்றுக்கொண்ட மதிப்பீட்டுக் கொள்கைக்கு எதிராக மனுக்கள்  மீதான விசாரணையை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது, மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், இரண்டு மாஸ்க் அணிந்துகொண்டு தேர்வை எழுதலாம் என வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்துஆய்வு செய்யுமாறு மத்தியஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இநத வழக்கு விசாரணை பிற்பகல் 2 மணிக்கு  தொடங்கியது. அப்போது மத்தியஅரசின் வழக்கறிஞர்,  கொரோனா சூழலில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது என்பது நிச்சயம் முடியாத ஒன்று. மாணவர்களின் உயிர் என்பது விலைமதிப்பற்றது.

இந்த இக்கட்டான சூழலில் மாணவர்களை தேர்வு எழுத சொல்லி  நிர்பந்திக்க முடியாது. தேர்வு எழுதும் ஒரு மாணவருக்கு ஏதாவது ஒன்று ஆனால், அது சிக்கலை ஏற்படுத்திவிடும். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியானதே என வலியுறுத்தியது.

இதையடுத்து,  சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.