டில்லி,

விவசாயிகளின் நலன் காக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?’ என்று மூன்று நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம், தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகளின் மரணம் தொடர்ந்து வருகிறது.  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 13ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள்,  விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு மெத்தன போக்கை கடைப்பிடிக்கக் கூடாது; மாநில அரசு அமைதி காப்பது சரியான அணுகுமுறை அல்ல. விவசாயிகளின் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில்  தமிழக விவசாயிகள் தொடர்பான வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு வழக்கறிஞரிடம்   ‘விவசாயிகளின் நலனுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர்,  பொருள்களுக்கு குறைந்த ஆதார விலை வழங்குவதாகவும், உழவர் சந்தை மற்றும் தகவல் மையங்கள் சிறப்பாகச் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் வாதத்தை எற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகக் கூறினர்.

ஆனால், ‘தமிழக அரசு எடுத்துள்ள  நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்து, மூன்று நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தவையும் பிறப்பித்து உள்ளனர்.

இந்த வழக்கு வரும் 8ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.