டெல்லி: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு கூட தடை விதிக்க மறுத்து விட்டது. அத்துடன், இபிஎஸ் மீது ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கு சாதகமாகவே அமைந்துளளது. இது ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படாத புதிய தீா்மானங்களை நிறைவேற்றுவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்தது. இது கட்சியின் சட்டவிதிகளுக்கு முரணானது, இதில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமையில்லை என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தின்  உத்தரவை எதிா்த்து  எடப்பாடி கே. பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று  உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, ஜே.கே. மகேஸ்வரி அமர்வில் விசாரிக்கப்பட்டது.  அப்போது, விசாரணையை தொடர்ந்து, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, எடப்பாடி தரப்பில் தன்மீது ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் மேல்முறையீடு மனு குறித்த விசாரணை நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து,  எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

இரு வழக்கிலும் உச்சநீதி மன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே உத்தரவிட்டு உள்ளதால், வரும் 11ந்தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் உத்தரவு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.