புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு (Third Party) மோட்டார் வாகன காப்பீட்டின் காலத்தை அதிகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் ஆகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு வழங்கிய உத்தரவின்படி, புதிய கார்களுக்கு இனி 4 ஆண்டுகளும், புதிய இருசக்கர வாகனங்களுக்கு 6 ஆண்டுகளும் கட்டாயமாக மூன்றாம் தரப்பு காப்பீடு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது புதிய கார்களுக்கு 3 ஆண்டுகளும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளும் காப்பீடு கட்டாயமாக உள்ளது. இதை தலா ஒரு ஆண்டு அதிகரிக்குமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) மற்றும் பொது காப்பீட்டு கவுன்சில் (GIC) எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், சாலைப் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியது.

மேலும், இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்களில் சுமார் 56 சதவீதம் காப்பீடு இல்லாமல் இயங்குகின்றன என்பது கவலைக்குரியது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 30.48 கோடி வாகனங்களில் 16.54 கோடி வாகனங்களுக்கு செல்லுபடியாகும் காப்பீடு இல்லை என்றும் தெரிவித்தது.

காப்பீடு இல்லாத வாகனங்களால் விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற நீண்ட காலம் நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டாய காப்பீட்டின் நோக்கம், விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதே என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள தானியங்கி வாகன எண் பதிவு (ANPR) கேமராக்களை, காப்பீட்டு தகவல் தரவுத்தளம் மற்றும் வாகன் (VAHAN) தளத்துடன் இணைக்குமாறும் உத்தரவிட்டது.

மேலும், பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும்போது வாகனத்தின் காப்பீட்டு நிலையை தொழில்நுட்ப ரீதியாக சரிபார்க்கும் முறையை உருவாக்க வேண்டும். காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு காப்பீட்டை புதுப்பிக்கும் வரை எரிபொருள் வழங்குவதைத் தடுக்கவும் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது.

இதுபோன்ற ஒருங்கிணைப்பு மூலம், காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு தானாகவே இ-சலான் (e-Challan) அனுப்புவதுடன், அதிவேகம், சிவப்பு சிக்னலை மீறுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களையும் ஒரே நேரத்தில் கண்டறிய முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், போக்குவரத்து போலீசாருக்கு கையடக்க கருவி அல்லது மொபைல் செயலி மூலம் வாகனங்களின் காப்பீட்டு விவரங்களை உடனுக்குடன் சரிபார்த்து அபராதம் விதிக்கும் வசதியை ஏற்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்திருந்த ஒரு மோட்டார் விபத்து இழப்பீட்டு வழக்கை விசாரிக்கும் போது, நாடு முழுவதும் வாகன காப்பீடு தொடர்பான குறைபாடுகளை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது.