காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள வினாயக் தாமோதர் சாவர்க்கரின் உறவினரான சத்யகி சாவர்க்கர், புனேயில் உள்ள சிறப்பு எம்.பி./எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் முக்கிய தகவல்களை ஒப்புக்கொண்டார்.

ராகுல் காந்தியின் வழக்கறிஞர் மிலிந்த் பவார் நடத்திய குறுக்கு விசாரணையின்போது, சாவர்க்கர் எழுதிய “விஞ்ஞான் வினிஷ்ட நிபந்த்” (அறிவியல் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள்) என்ற நூல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த நூல் உண்மையிலேயே வினாயக் சாவர்க்கர் எழுதியதுதான் என்றும், அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளும் அவருடையவையே என்றும் சத்யகி சாவர்க்கர் ஒப்புக்கொண்டார்.

அந்த நூலில், “பசு என்பது பயனுள்ள ஒரு விலங்கு மட்டுமே; அதை தெய்வமாகவோ, தேவியாகவோ வழிபடுவது மனித குலத்தையும், தெய்வீகத்தையும் அவமதிப்பதாகும்” என்று சாவர்க்கர் எழுதியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நாய், குதிரை, கழுதை மனிதர்களுக்கு எப்படி பயனுள்ள விலங்குகளோ, அதேபோல பசுவும் ஒரு பயனுள்ள விலங்குதான். எனவே அதைப் பாதுகாக்க வேண்டும்; ஆனால் வழிபடக் கூடாது என்றும் அவர் எழுதியுள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.

அதே நூலில், முகலாயர் மற்றும் முஸ்லிம் படையெடுப்புகளின் போது, எதிரிகள் பசுக்களை கேடயமாகப் பயன்படுத்தியதால், அவற்றைக் கொல்லக் கூடாது என்ற எண்ணத்தில் இந்துப் படைகள் பின்வாங்கின. இதனால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது என்றும் சாவர்க்கர் எழுதியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோயில்கள் இடிக்கப்படும், பிராமணர்கள் கொல்லப்படுவார்கள், பசுக்கள் கொல்லப்படும் என்ற அச்சத்தால் போரில் இருந்து பின்வாங்கியது நாட்டின் சுதந்திரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் அவர் விமர்சித்துள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.