டெல்லி: ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால், அரசு பணிகள் முடங்குவதாக திமுகஅரசு குற்றம் சாட்டி வருகிறது. மேலும், தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட சில விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது எனக் குறிப்பிட்டு, வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை ஜனவரி 10ந்தேதி அன்று தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்பட ஆர்.என்.ரவிக்கு விருப்பம் இல்லாததையே அவரது செயல்பாடுகள் காட்டுவதாகவும் விளம்பரம் தேடும் நோக்கிலேயே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றும் , அரசியல் சாசனத்தை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து வருவதால் அவரை நீக்க வேண்டும் எனல் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ்கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற வழக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.