டில்லி:

அவதூறு செய்தி வெளியிட்டதாக ஆந்திரா பத்திரிக்கை மீது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2017ம் ஆண்டு மே மாதம் அமோதா பப்ளிகேஷன்ஸ் நடத்தும் ஆந்திரா ஜோதி தெலுங்கு பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மிளகாய் விவசாயிகளின் அவல நிலையை எடுத்துக் கூற பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. அவர் மீதான சிபிஐ விசாரிக்கும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக விவாதிக்க தான் சந்தித்தார் என்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையை எதிர்த்து மங்களகிரி எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி ஐதராபாத் 17வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். கட்சிக்கும், தலைவருக்கும் இந்த செய்தி அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், ‘‘ இந்த மனுவோடு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் எவ்விதமான அவதூறும் இல்லை’’ என்று கூறி மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்.