டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவினரை நியமிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்ட உச்சநீதி மன்றம்,  வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

மறைந்த  முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோவில் 75நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவர் இறந்ததாக கூறப்பட்டது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. மருத்துவ மனையில் என்ன நடக்கிறது என்பது குறித்து அப்போலோ நிர்வாகமோ, அப்போதைய அதிமுக அரசோ மக்களும் ஏதும் தெரிவிக்காத நிலையில், அவரது  மர்ம மரணம் ஏராளமான சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தமிழகஅரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 100க்கும் மேற்பட்டோரை அழைத்து விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்து தடையாணை பெற்றது.

இதுதொடர்பான வழக்கு கடந்த இரு ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு,  ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழுவை அமைக்க டெல்லி எய்ம்ஸ் இயக்குனருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு (“கோஐ”) உதவ வேண்டும் என்று கூறியது.

மேலும்,  ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க கோரி அப்பல்லோ தொடர்ந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை (“அப்பல்லோ”) தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவை தள்ளுபடி செய்தது. அது  விசாரணை நடவடிக்கைகளை சீர்குலைக்கும் என்று கூறியதுடன் சாட்சிகளின் வாக்கு மூலங்களை ஆராய அப்பல்லோ தரப்போ, சசிகலா தரப்போ ஆணையத்தை அணுகி கோரிக்கை வைக்கலாம் என்றும்,  ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை  உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். அட்புல் நசீர் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு கூறியது.