டெல்லி:  மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங்கின்போது, உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு கடைபிடிக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கு 10சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மத்தியஅரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடும், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கி யோருக்கு 10 விழுக்காடும் ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசும், மருத்துவக் கலந்தாய்வுக் குழுவும் அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவில், நடப்புக் கல்வியாண்டில், மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த அனுமதித்துள்ளது

மருத்துவ மேற்படிப்புக்கான  கலந்தாய்வுக்கு நடத்த  உச்சநீதிமன்றம் அனுமதி  வழங்கியுள்ளதுடன், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது என்றும், அத்துடன்,  பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு கடைபிடிக்கலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளது.