டில்லி:

ம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டதை  எதிர்த்து  தொடரப்பபட்ட வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதுதொடர்பாக தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்  5-ம்தேதி (2019) ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவி 370 மற்றும், 35ஏ-வை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன், இணையதளம் மற்றும் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டது. மேலும்,  அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில்,  ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டது மற்றும் ஊடகங்களுக்கு தடை, இணையதள சேவை முடக்கம் போன்றவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எஸ். அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு  விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின்போது,   தனிநபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாதுகாப்பையும் காக்க வேண்டியது  நீதிமன்றத்தின் கடமை, மற்றும் அரசின் கடமையும் கூட, இணையதளம் மூலம் கருத்து தெரிவிப்பது அரசியல் சாசனம் 19ன் கீழ் வருகிறது. இது ஒருவரின் அடிப்படை உரிமை, சுதந்திரமான பேச்சின் ஒரு பகுதியாகும், என்று கூறிய நீதிபதிகள், இணையதள தடையை நீக்குவது குறித்து 7 நாளில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

அதைத்தொடர்ந்து காஷ்மீரில் தற்போது மொபைல் சேவைகள், இணையதள சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முக்கியமான  இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. வழக்கின்  வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கை 5 பேர் கொண்ட அமர்வே விசாரிக்கலாமா அல்லது அரசியல் சாசன அமர்வில் விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி  தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.