ஆட்சியாளர்களை  ஆதரிக்கிறது என் கடமை: மதுரை ஆதீனம் கலகல பேட்டி பேட்டி (தொடர்ச்சி)

Must read

ஆன்மிகத்தில் இருப்பவர் அரசியலுக்கு வரலாமா என்பது மட்டுமல்ல.. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது  அமைச்சர்களைவிட  அதிகமாக முதுகு வளைந்து கும்பிடு போட்டாரே என்று விமர்சிக்கிறார்களே..
அதெல்லாம் தப்பே இல்லை. அம்மா புரட்சிதலைவி அவர்கள் தமிழகத்துக்கு நல்ல பல திட்டங்களை அளித்திருக்கிறார். மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்திருக்கிறார். அவரை மரியாதை நிமித்தம் வணங்குவது என்பது தவறே இல்லை.

மதுரை ஆதீனம் - ஜெயலலிதா
மதுரை ஆதீனம் – ஜெயலலிதா

காஞ்சிபுரத்தில் முன்பு சங்கராச்சாரியாரை சந்தித்தபோது ஜெயலலிதாதான் அவரை பயபக்தியுடன் வணங்கினார்… ஆனால்..
(குறுக்கிட்டு)  அதே போல அம்மா இங்கே (மதுரை ஆதீனம் மடம்) வந்தால் அன்பாக வரவேற்று உபசிப்போம்.  ஏனென்றால் இது இந்தியாவின் மூத்த பழமையான ஆதீனம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள்..
சரி.. ஆன்மிக தலைவர் என்று சொல்லப்படும் நீங்கள் புரட்சித்தலைவி அம்மா என்றெல்லாம்  அழைப்பதை பலரும் விமர்சிக்கிறார்களே..
அதான் ஏற்கெனவே சொன்னேனே.. விமர்சிக்கிறவர்கள் விமர்சிக்கட்டு்ம். நான் அப்படி அழைப்பதில் தவறில்லை..
தவிர, நான்தான் அப்படிச் சொல்லணும். ஏனென்றால் கட்சிக்காரர்கள் சொல்வது வழக்கமான ஒன்றுதான். ஆதீனமான நானே அம்மா புரட்சித் தலைவி என்று சொல்வதுதான் அவருக்கு ஒரு அங்கீகாரம்.
நமீதா
நமீதா

 நடிகை நமீதா கூட அதிமுக வில் இணைந்திருக்கிறார்..
(குறுக்கிட்டு) இருங்க.. நீங்க என்ன கேட்கப்போறீங்கன்னு தெரியும். எல்லா கட்சிகளிலும் நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். பிரச்சாரம் செய்கிறார்கள். ஆகவே அதிமுகவில் நமீதா சேர்ந்தது தப்பில்லை.
சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதது. அதே போல அரசியலும் ஆன்மிகமும் பிரிக்க முடியாதது. ஸோ.. அரசியல் கட்சிகளில் நடிகர்கள் இணைவதோ, ஆன்மிகவாதிகள் பிரச்சாரம் செய்வதோ தவறல்ல.
சரிதான். அப்படிப்பார்த்தால் ஏற்கெனவே ஆன்மிகத்தில் இருக்கிறீர்கள்.. அரசியலிலும் இருக்கிறீர்கள். சினிமாவுக்கும் வரலாமே.  திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தால் உங்கள் புகழ் இன்னும் கூடுமே!
இல்லை.. இல்லை…! நடிகர், நடிகைகளை நான் பாராட்டுவேன். மற்றபடி நான் நடிப்பதாக இல்லை.
ஒருவேளை நீங்கள் ஹீரோவாக நடித்தால், யாரை ஹீரோயினாக போடச் சொல்வீர்கள்?
(சிரிக்கிறார்) நடிக்கவே போறதில்லை.. இதிலே ஹீரோயினா.. அத்தைக்கு மீசை முளைச்ச கதைதான்.
கருணாநிதி
கருணாநிதி

 
சரி.. ஏற்கெனவே தி.மு.க.வை அதன் தலைவர் கருணாநிதியை ஆதரித்தீர்கள்..
(குறுக்கிட்டு) ஆமாம்..  ஈழத்தமிழர் விவகாரத்தில், தமிழக உரிமையில் தீவிரமாக இருந்தார் திமுக தலைவர் கலைஞர்.  ஆகவே அப்போது அவரை ஆதரித்தோம்.
பட் இப்பவும்  கலைஞரை விமர்சிக்கவில்லை…  குறை சொல்வதில்லை… கண்டிக்கிறதில்லை…!  என் பாலிசி,  அம்மாவை பாராட்டுவது மட்டும்தான்.
 கேள்வியே அதுதான்.  கருணாநிதியை பாராட்டிய நீங்க இப்போ ஜெயலலிதாவை  பாராட்ட காரணம் என்ன..
1990ம் வருடத்தில் இருந்து கடந்த 25 ஆண்டுகளாக அம்மாவை ஆதரித்து வருகிறேன்..
இடையில் 1996ம் ஆண்டு வாக்கில் தி.மு.க. ஆட்சியின் போது கருணாநிதை ஆதரித்து பேசினீர்கள்..
(சற்று நேர மவுனத்துக்குப் பிறகு..)  ஆட்சியில் இருக்கிறவங்களை ஆதரிக்கிறது என் கடமை!  ஏனென்றால் ஆட்சியில் இருப்பவர்கள் நல்லது செய்யும்போது அதை ஆதிப்பது பாராட்டுவது எனது பண்பு.
 மற்ற ஆதீனங்கள் உங்களைப்போல வெளிப்படையாக அரசியல் பேசுவதில்லையே..
அவர்கள் இறைப்பணியை மட்டும் பார்க்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு அரசியல் தெரியாது என்பதல்ல. பேசுவதில்லை அவ்வளவுதான்.
 அதைத்தான் கேட்கிறேன். நீங்கள் மட்டும் அரசியல் பேச காரணம்.. உங்களது மதுரை ஆதீனத்தில் நிறைய தவறுகள் நடப்பதுதான் காரணம் என்றும், நடவடிக்கைகளுக்கு பயந்துகொண்டு ஆளுங்கட்சியை  மதுரை ஆதீனம் ஆதரிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறதே..
ஹூம்.. க்கும்! இல்லை.. இல்லை..!  இங்கே முறைப்படி எல்லா சம்பிரதாயங்களும் நடக்கின்றன. எந்தவித முறைகேடும் இங்கே நடக்கவில்லை.
மதுரை ஆதீனம் - நித்தியானந்தா
மதுரை ஆதீனம் – நித்தியானந்தா

 நித்தியானந்தா..
(குறுக்கிட்டு) அதான் பேசாதீங்கன்னு சொல்லிட்டேனே.. அது முடிந்துபோன விவகாரம்.. இப்போ வேறு ஒரு இளைய ஆதீனத்தை நியமித்துவிட்டோம்… அவர் நிரந்தரமாக இருப்பார்.
வைஷ்ணவி
வைஷ்ணவி

வைஷ்ணவி மற்றும் அவரது சகோதரி ஆதீன மடத்திலேயே இருக்கிறார்கள் என்றும்..
(குறுக்கிட்டு) அப்படி யாரும் இங்கே கிடையாது.
ஆதீனத்தை அரசே கையகப்படுத்தவேண்டும் என்ற குரல் ஒலிக்கின்றதே..
அப்படி நடக்காது. அதுபோல செய்யமாட்டாங்க..!  இப்போதைக்கு இது போதும். எலக்சன் முடிஞ்சோன மறுபடி பேசலாம்.
–  நமக்கு விடை கொடுத்தார் ஆதீனம்.
 பேட்டி: டி.வி.எஸ். சோமு
 
..
 
 

More articles

Latest article