நியூயார்க்: இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றுள்ள கூகுள் தலைமை நிர்வாகியான மதுரையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, என்னுள் ஒரு பகுதி இந்தியா என நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர்பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். அவரது வணிக  வளர்ச்சியை பாராட்டும் வகையில், இந்திய-அமெரிக்கரான சுந்தர் பிச்சைக்கு வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் 2022ம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என கடந்த குடியரசு தினத்தின் போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சுந்தர்பிச்சைக்கு,  அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் மூலம், பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அமெரிக்காவில் இந்தியாவின் தூதர் தரன்ஜித் சிங் சந்துவிடமிருந்து 50 வயதாகும் சுந்தர் பிச்சை பத்ம பூஷண் விருதினைப் பெற்றுக் கொண்டார். இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் மூன்றாவது இடத்தில் இருப்பது பத்ம விருதுகள். இதனை வெள்ளிக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் அவரது குடும்பத்தினர் பங்கேற்புடன் நடைபெற்ற எளிய விழாவில், சுந்தர் பிச்சை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சுந்தர்பிச்சை, இந்த மிகப்பெரிய கௌரவத்தை அளித்த இந்திய அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்னை வடிவமைத்த இந்திய நாட்டினால் இந்த வகையில் கௌரவிக்கப்படுவது விவரிக்க முடியாத அர்த்தங்களை ஏற்படுத்துகிறது. என்னுள் ஒரு பகுதி இந்தியா. நான் எங்கெங்குச் சென்றாலும் அங்கு என்னுடன் வரும் என்றும் கூறினார்.