சென்னை: கொளுத்தும் அக்னி நட்சத்திரத்தை குளிர்விக்க கோடை மழை எப்போது பெய்யும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கி உள்ள நிலையில், கோடை வெயில் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சி வீட்டிலேயே முடங்கி கிடக்னிற்னர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இன்று கோவை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் வெயில் குறைந்து காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா, மரத்வாடா உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை அதாவது சுமார் 1.5 கிமீ உயரத்தில் நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை (8ந்தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வாகனம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி. மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும் வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]