பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக நின்று பா.ஜ.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தி யுள்ளார்- நடிகர் பிரகாஷ்ராஜ். மோடிக்கு எதிராக தேர்தல் அரங்கில் அவர் கர்ஜித்துக்கொண்டிருக்க-

தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம்  கட்சிக்கு  மற்றொரு சினிமா நட்சத்திரம் திருகு வலியை கொடுத்துள்ளார்.

அவர்-நடிகை சுமலதா. மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி. கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவை  தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று 3 முறை ஜெயித்தவர் –அம்பரீஷ் . மண்டியா சட்டசபை தொகுதியிலும் ஒரு முறை வென்றுள்ளார்.

கடைசி காலத்தில் அம்பரீஷை காங்கிரஸ் ஓரம் கட்டியதால் அரசியல் நடவடிக்கைகளில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.அவரது மறைவுக்கு பிறகு சுமலதா ஆர்வம் காட்டத்தொடங்கி இருப்பது – தேவகவுடா கட்சிக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.

மாண்டியா மக்களவை  தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின்  கோட்டையாக அண்மை காலமாக இருந்து வருகிறது. தற்போது அதன் கூட்டணியில் காங்கிரசும் உள்ளதால் அங்கு எளிதில் வெல்லலாம்.

சுமலதா போட்டியிட்டால் –தேவகவுடா கட்சியின் வெற்றி கேள்விக்குறிதான். அந்த தொகுதியில் அம்பரீஷுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. காங்கிரஸ் காரர்கள் மத்தியிலும் அவருக்கு தனி மரியாதை உண்டு.சுமலதா அங்கு நின்றால் -நிலைமை தலை கீழாக மாறிவிடும்.

காங்கிரஸ் வேட்பாளராக அங்கு சுமலதா களம் இறங்க  தயாராக இருக்கிறார்.  ஆனால் மாண்டியாவில் அவரை நிறுத்தினால் –கூட்டணி முறிந்து போகும்  சாத்தியங்கள் உள்ளன.

பெங்களூரு தெற்கு தொகுதியில் சுமலதா போட்டியிட்டால் –அவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்க மேலிடம் ரெடி.

ஆனால் அவரோ,’’மனு தாக்கல் செய்தால்  மாண்டியாதான். இல்லையேல் மக்களவையே வேண்டாம்’’என்பதில்  உறுதியாக இருக்கிறார்.

போதாக்குறைக்கு ‘’சுமலதா மாண்டியாவில் நின்றால் அவரை ஆதரிக்க தயார்’’ என்று பா.ஜ.க. செய்திகளை கசிய விட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் பா.ஜ.க. ஆதரவை ஏற்க சுமலதா தயாராக இல்லை.

மாண்டியாவில் என்ன நடக்கப்போகிறது?

சுமலதாவுக்கு காங்கிரஸ்  டிக்கெட் கொடுக்காவிட்டால்- சுயேச்சையாக அவர் போட்டியிடக் கூடும்.உள்ளுர் காங்கிரஸ் ஆதரவுடன்- கணவர் இறந்த அனுதாப அலையும் கூட்டு சேர்ந்து –சுமலதாவை  ஜெயிக்க வைத்துவிடும்  என்கிறார்கள் –ஊடகவியல் ஆட்கள்.

–பாப்பாங்குளம் பாரதி