ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியில் இன்று காலை 6 மணிக்கு திடீர் சூறாவளிக் காற்று வீசியதால்  படகுகள் சேதம் அடைந்துள்ளன.

கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.   இதனால் பல அணைகள் நிரம்பியதால் உபரிநீர் திறக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும்  கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை அளித்துள்ளது.

இதனால் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் பல படகுகள் கரையோரம் நங்கூரம் இட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  இன்று காலை சுமார் 6 மணி அளவில் இந்த பகுதியில் திடீரென சூறாவளிக்காற்று வீசியது.   இதனால் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்ட படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி உள்ளன.   இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன.

இந்தப் பகுதி மீனவர்கள்  இதனால் கடும் துயர் அடைந்துள்ளனர்.   சூறாவளியால் சேதம் அடைந்த படகுகளை மீட்கும் பணியில் அனைத்து மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த சேத மதிப்புக்களைப் பார்வை இட்டு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென மீனவர் சங்க பிரதிநிதிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.