சென்னை: நாடு முழுவதும் சமையல்  எரிவாயு சிலின்டருக்கான மானியம் ரூ.24 ஆக  குறைக்கப்பட்டு உள்ளது. இது இல்லத்தரசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வங்கிகளில் சென்று விசாரரித்து வருகிறார்கள். மத்தியஅரசின் இந்த ஏமாற்று நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

மோடி தலைமையிலான மத்தியஅரசு பதவி ஏற்றதும், சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை கைவிட வலியுறுத்தியதுடன், மானியமுடன் கூடிய சிலிண்டர் பெறுவோருக்கு, மானியத்தொகை வங்கியில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி செயல்பட்டு வருகிறது. அத்துடன், பெட்ரோல், டீசல் விலையைப்போல சமையல் எரிவாயு விலையை நிர்ணயிக்கவும் எண்ணை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிவிட்டது. இதையடுத்து, சமையல் எரிவாயு விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், ஓட்டல்கள் மற்றும் பிற வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பிரதேசங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 5 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானிய விலையில் பெறலாம். இதற்கான மானியத்தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வந்ததது.

ஆனால், இந்த மானியத்தொகை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.  கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரூ.200 வரை மானியம் வழங்கி வந்தது. பின்னர்  மானியம் ரூ.174.72 ஆகவும் இருந்தது. ஆனால் இந்த தொகை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.  கடந்த ஆண்டு (2020) மானியமாக ரூ.100 அளவில் வழங்கப்பட்டது. தற்போது இத்தொகை படிப்படியாக குறைந்து இம்மாதம் ரூ.24.95 பைசா மட்டுமே மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.‘

வீடுகளுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் தற்போது ரூ.710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக, மக்களின்  வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மானியத்தொகை குறைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கடுமையான கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மானியம் குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலையையும், கொந்தளிப்பையும்  ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவல் வைரலாகி வரும் நிலையில்,  பல இல்லத்தரசிகள் வங்கிகளை முற்றுகையிட்டு, வங்கி பாஸ்புக்கை பதிவு செய்து வருகின்றனர். அதில் மானியத் தொகை வெறும் ரூ.24.95 மட்டு வரவு வைக்கப்பட்டுள்ளதைக்கண்டு கொந்தளித்து வருகின்றனர்.  மோடி அரசு, பொதுமக்களை வஞ்சித்து வருகிறது. அவர்களுக்கு சரியான பாடம்புகட்ட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

நாடு தற்போது எதிர்கொள்ளும்  வேலையில்லா திண்டாட்டம் மற்றும் கொரோனா அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு மானியத்தொகையை உயர்த்த வேண்டும் என்று நுகர்வோர் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.