சுதந்திரம் பெற நேதாஜியை காரணம், காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி குறிப்பிட்டிருந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “இந்தியா சுதந்திரம் பெற நேதாஜியே காரணம், காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை” என்று பேசியிருந்தார்.

ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காந்தியை தேசத் தந்தையாக ஏற்றுக்கொண்டவர் சுபாஷ் சந்திரபோஸ் என்று நேதாஜியின் மகள் அனிதா போஸ் பிஃபாப் கூறியுள்ளார்.

ஆஸ்திரியா நாட்டில் வசிக்கும் 82 வயதாகும் நேதாஜியின் மகளான அனிதா போஸ் தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் தகவலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பலமுறை இந்தியா வந்துள்ள அனிதா போஸ், “தனது தந்தை காந்தியை மாகானாக பார்க்கவில்லை என்றபோதிலும் அவரை தேசத் தந்தையாக தேசத்தின் தலைவராக முழுமனதோடு ஏற்றுக்கொண்டவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” என்று தெரிவித்துள்ளார்.

1934ம் ஆண்டு ஆஸ்திரியா சென்ற சுபாஷ் சந்திரபோஸ் 1937ம் ஆண்டு அதே நாட்டைச் சேர்ந்த எமிலி செங்கல் என்பவரை மணந்து கொண்டார்.

பின்னர் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் படைகளுடன் இனைந்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷ் படையினர் மீது தாக்குதலை நடத்திய சுபாஷ் சந்திரபோஸ் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி நடந்த விமான விபத்தில் மரணமடைந்தார்.

இந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதற்க்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் “நேதாஜிக்கு மகாத்மாவுக்கும் இருந்த நட்புறவை கொச்சை படுத்தும் விதமாக ஆளுநரின் பேச்சு உள்ளது” என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.