கோவை: கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகன பேரணியின்போது, சாலையோரம் பள்ளிக்குழந்தைகள் வரவேற்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த  பிரதமர் மோடி  வாகன பேரணி நடைபெற்றது. அதன்படி, கோவை சாய்பாபா காலனி சிக்னல் அருகே தொடங்கி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை நடைபெற்றது. இந்த பேரணியின்போது, சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையுடன் காணப்பட்டனர். அவர்களை அரசியல் கட்சியினர் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி வகுப்பு நேரம் முடிந்த பிறகு நடைபெற்ற பேரணியில் மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டது பேசும்பொருளாக மாறியது.

ஏற்கனவே தேர்தல் ஆணையம் மாணவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில், அதை மீறி மாணவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக,   கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உரிய விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் இது தொடர்பாகசாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது குழந்தைகளை சரியாக பராமரிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாக சட்டப்பிரிவு 75 ஜே.ஜே.-ன் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முன்னதாக கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி புனித அந்தோணியம்மாள் நேற்று சாய்பாபாகாலனியில் உள்ள சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.  3 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை குறித்து  கருத்து தெரிவித்த கல்வித்துறை அதிகாரிகள், விசாரணை தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் விவகாரம் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.