சென்னை:

மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கமல் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘அமைதியாக இருந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய மகாத்மா காந்தி எனக்கு பிடித்த அரசியல் தலைவர். இவர் தவிர அம்பேத்கர், காமராஜர், பெரியார், எம்ஜிஆர், கருணாநிதி என பல அரசியல் தலைவர்களை எனக்கு பிடிக்கும். அனைவரது பெயரையும் கூறினால் அரசியல் ஆதாயம் தேடுவதாக கூறுவார்கள்.

இந்தியாவுக்கும், தமிகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களது ஆலோசனையும் வரவேற்கிறேன். அதை இங்கே இருந்து ஆரம்பிக்கிறேன். தமிழகம் என்ற எனது தெரு, வீட்டை நான் சுத்தமாக பார்த்துக் கொண்டால் நாடு சுத்தமாகிவிடும். விழிப்புணர்வு என்பது அவசியம். வரும் முன் காக்க வேண்டும். அது மாணவர்களால் செய்ய முடியும்’’என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘நேர்மையாக இருப்பது இயலாது என்று நினைக்க வேண்டாம். வறுமை ஒழிப்போம் என்பது அனைத்து தலைவர்களும் கூறும் வாசகம் ஆகிவிட்டது. இனி வரும் திரைப்படங்களுக்கு அரசியல்வாதிகள் நெருக்கடி வரலாம். ஜனநாயகம் என க;றிக் கொண்டு மக்களை சுரண்ட விடக்க கூடாது. ஒழுங்காக பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை தூக்கி எறிய வேண்டும்.

இயக்குனராக வேண்டும் என்று தான் வந்தேன். பாலச்சந்தர் தான் என்னை நடிகனாகி என் வாழ்க்கையை மாற்றிவிட்டார். இங்கேயும் அப்படி தான் வந்தேன். கோபம் தான் காரணமாக இருந்தது. ஆனால், அது மட் டுமே காரணமாக இருக்க கூடாது என்பதை உணர்ந்துள்ளேன்’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘அன்பே சிவம், தசாவதாரம், வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களை தற்போது ரீமேக் செய்ய முடியாது. வழக்கு தொடருவார்கள். பத்மாவத் படத்தின் பெயரால் மாணவர்கள் சென்ற பஸ் தாக்கப்படுகிறது. சும்மா இருங்கள். நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்று கூறும் நிலை தான் உள்ளது. நாளை நமதே என்பது உங்களையும் சேர்த்து தான் தெரிவித்துள்ளேன். சாதி மதத்தால் மக்கள் பிரிந்து கிடப்புது தவறு.

ஓட்டு என்பது வியாபாரம் செய்யும் விளையாட்டு அல்ல. 10 வருடமாக ஓட்டுப் போடுங்கள் என்று கூறினேன். தற்போது வர வேண்டிய கட்டாயத்தை பலர் ஏற்படுத்திவிட்டார்கள். அதனால் தான் வந்துள்ளேன். நீங்களும் வர வேண்டும். குழந்தைகளை மரம் போல் வளர்க்க வேண்டும். பெற்றோர் தண்ணீர் மட்டுமே ஊற்ற வேண்டும். போன்சாய் மரம் போல் இல்லாமல் அவர்கள் இஷ்டத்திற்கு விட வேண்டும். குழந்தைகள் வளர் ந்து தோப்பாகி நிற்கும் போது அதன் நிழலில் நாம் இருக்க வேண்டும் என்பது தான் பெற்றோர் கடமை’’ என்றார்.

‘‘நானும் உங்களை போல் ஒரு ரசிகன். நானும் ரசிகனாக இருந்து தான் கலை மீது ஆர்வம் வந்தது. முதுகு தண்டு வலிக்கு தலைக்கனம் தான் காரணம். நேர் கொண்ட பார்வை இருந்தால் தலைக்கனம் வராது. வெற்றி தங்குமா என்று சொல்ல முடியாது. ஒரு வெற்றியை அடைந்துவிட்டால் அடுத்த வெற்றி கண்ணுக்கு தெரிந்துவிடும். வெற்றிக்கான இலக்கு சிறப்பு என்று இருக்க வேண்டும்’’ என்றார்.