திருக்குவளை: காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது  என திருக்குவளையில் மறைந்த முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது. இன்று ஆகஸ்டு 25ந்தேதி மீதமுள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இந்த திட்டம் மாநிலம் முழுவதும்  545 தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது.  இதன்மூலம் 1 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர். தற்ற்போது இந்த திட்டம்  தமிழ்நாடு முழுவதும்  மீதமுள்ள 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,  17 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் விரிவாக்கத்தை,  திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பள்ளியில் உள்ள சமையலறையை பார்வையிட்டு, உணவின் தரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த அவர், மாணவ, மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறிவிட்டு, பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு சாக்லெட் வழங்கினார். அப்போது முதலமைச்சருக்கு ரோஜாப்பூ கொடுத்து மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். காலை உணவுத்திட்டத்தால் என் மனம் நிறைந்து, மகிழ்கிறது. மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருப்பதால் எனக்கு மகிழ்ச்சி. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பர்; திமுக அரசு உயிர் கொடுத்துள்ளது. காலை உணவு திட்டம் எனக்கு மனநிறைவு அளிக்கிறது. மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்க இருப்பது தனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரையில் தொடங்கிய காலை உணவு திட்டம் இப்போது 17 லட்சம் பேருக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்பற்று, சிந்தனைத் திறன் மூலம் தலைவர் ஆனவர் கலைஞர். தமிழ் மாணவர் மன்றத்தை சிறுவயதிலேயே தொடங்கியவர் கலைஞர். திருக்குவளையில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தியது கலைஞரின் மகனாக தமக்கு பெருமை தருகிறது. வாழ்க்கை முழுவதும் போராடியவர், தான் அடக்கம் செய்ய வேண்டிய இடத்தையும் போராடியே பெற்றவர்தான் கலைஞர். மதிய உணவு திட்டம் திமுக ஆட்சியில் செழுமைப்படுத்தப்பட்டது.

எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டத்தில் வாரம் 5 நாட்கள் முட்டை வழங்கியவர் கலைஞர். 1921 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டமே அமலில் இருந்தது. சென்னையில் பள்ளி விழாவில் பங்கேற்றபோது மாணவ, மாணவிகள் கூறியதை கேட்டே காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே புதுப்புது திட்டங்களை கொண்டு வருவதில் முன்னோடியாக திகழ்கிறது.

மதிய உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை பதிவு அதிகரிக்கும். 6 வயதுக்குட்பட்ட 92,000 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சியில்தான் அரசாங்கத்தின் வளர்ச்சி உள்ளது. இது துரோணாச்சாரியார் காலம் அல்ல; ஏகலைவன் காலம். புதிய கல்விக் கொள்கை மூலம் ஏகலைவனிடம் கட்டை விரல் கேட்கும் துரோணாச்சாரியார் போல ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது என்று கூறினார்.