டில்லி

கொரோனா வேகமாக அதிகரிக்கும் நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்த மத்திய அரசு முடிவு எடுத்ததற்கு மாணவர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   தினசரி பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.  நேற்று 2.22 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 2.67 கொடி பேர் பாதிக்கப்பட்டு 3.03 லட்சம் பேர் உயிர் இழந்து இதுவரை 2.37 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 27.16 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு கொரோனா தொற்று ஏராளமாக அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.  இது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மத்திய மற்றும் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார்.  அப்போது அவர் மே மாதம் 25ஆம் தேதிக்குள் இது குறித்த ஆலோசனைகளை அளிக்க அவகாசம் அளித்துள்ளார்.

தேர்வுகள் நடத்துவதற்கு டில்லி உள்ளிட்ட பல மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  இம்மாநிலங்கள் தங்கள் மாநில கல்வி ஆணையம் இது குறித்து முடிவு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளன.  ஆனால் மத்திய அரசு சி பி எஸ் இ உள்ளிட்ட 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக உள்ளது.   இந்த தேர்வுகளின் கால நேரத்தைக் குறைக்கலாம் எனவும் மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த பிடிவாத போக்கு மாணவர்களிடையே கடும் அதிருப்தியை அளித்துள்ளது.   பல மாணவர்கள் டிவிட்டரில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு தேர்வு நடத்துவது குறித்த தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவித்து வருகின்றனர்.  பலர் இது குறித்து கண்டனங்களும் எழுப்பி உள்ளனர்.

இது குறித்து ஒரு மாணவர், “நாங்கள் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டுமானால் அந்த தேர்வை மயானத்தில் நடத்துங்கள் அல்லது தேர்வு எழுதி முடிந்ததும் எங்களை எரிக்க அல்லது புதைக்க எங்களுக்கு மயானத்தில் இட வசதி செய்து கொடுங்கள்” என கோபமாகப் பதிந்துள்ளார்.

மேலும் நேரம் குறைப்பு பற்றி ஒரு மாணவர், “பலரும் தேர்வு எழுதுவதை விட வாழ்வதையே முக்கியமாகக் கருதுகின்றனர்.  இது அவர்களுக்கு பொழுதுபோக்கு அல்ல.   எனவே நீங்கள் நேரத்தைக் குறைப்பதாகக் கூறி எங்களை முட்டாளாக்கி எங்கள் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.