சென்னை,

மீண்டும் மாணவர்கள் கூட இருக்கிறார்கள் என்ற சமூக வலைதள தகங்களை தொடர்ந்து  சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் ஆணையர் சேஷசாயி அந்த பகுதிகளில் ஆய்வு நடத்தினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக, மெரினா கடற்கரையில் இணைந்து போராடினர். தங்களது போராட்டத்திற்கு எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவு தர நேரில் வர வேண்டாம் என அறிவித்து, அரசியல் கட்சியினரையும் திருப்பி அனுப்பினர்.

அமைதி வழியில் நடைபெற்ற போராட்டம் இறுதியில் சமூக விரோதிகளால் வன்முறையாக மாற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து மெரினா கடற்கரை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுகவில் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகவும், பின்னர் சட்டமன்ற குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் ஜெயலலிதா சமாதிக்கு தனது ஆதரவாளர்களுடன் வர இருப்பதால், 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.

அதன்பின்னர் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளால் தமிழக முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை கவர்னருக்கு அனுப்பினார். தன்னை மிரட்டி ராஜினாமா பெறப்பட்டது என சசிகலாவை எதிர்த்து களத்தில் இறங்கினார்.

ஏற்கனவே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்  கட்சியிலும், ஆட்சியிலும் பங்குபெறுவது பொதுமக்களுக்கும், பெரும்பாலான அதிமுக தொண்டர்களும் விரும்பாத நிலையில், சசிகலாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் எராளமான பதிவுகள் வைரலாகி வருகின்றன.

தற்போது சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள நிலையில், மீண்டும் சமூக வலைதளங்களில் சசிகலாவின் பினாமி எடப்பாடி என பதிவுகள் வெளியாகி வருகின்றன. பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும், இதற்காக இளைஞர்கள் மீண்டும் இணைய வேண்டும் எனறும்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக மெரினாவில் மீண்டும் தன்னெழுச்சி போராட்டம் தொடங்கிவிடுமோ என்ற அச்சத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதிரடிப்படை போலீசாரும் குவிந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாநகர கூடுதல் ஆணையர் சேஷசாயி மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதன் காரணமாக கடற்கரை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.