சென்னை:

நிர்பந்தத்தால் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

விரும்பிப் படிக்கும் மாணவர்கள்கூட, தொழிற்சாலையுடன் சார்ந்த கல்வி நிறுவனங்களாக இருந்தால் மட்டுமே அதில் சேரவேண்டும்.
இது குறித்து கல்வியாளர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:

தேவையில்லாத விஞ்ஞானம் சமுதாயத்தை மேம்படுத்த உதவும் என்று பொறியியல் துறையை நேசிப்போர் நினைக்கின்றனர்.

இன்றைய போட்டி உலகில், படித்தால் மட்டும் போதாது, பொறியியல் துறைக்கான தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். சரியான கல்லூரியை தேர்வு செய்வது கூட ஒவ்வொரு மாணவருக்கும், பெற்றோருக்கும் கடினமான ஒன்றுதான்.

நிர்பந்தமும், எல்லோரும் சேர்கிறார்கள் நாமும் சேர்வோம் என்ற எண்ணமும்தான், பலரை பொறியியல் கல்லூரியில் சென்று சேர்க்கிறது. விருப்பப்பட்டு, பொறியியல் கல்லூரியில் சேர வேண்டும் என உள் மனது சொல்வதைக் கேட்டுத் தான் சேர வேண்டும். ஆடு பின்னே அணி வகுத்து செல்லும் மந்தை போல் செல்லக் கூடாது.

நூறு சதவீத வேலைவாய்ப்பு என்பது மாணவர்களை தங்கள் கல்லூரிகளுக்கு ஈர்க்க சொல்லப்படும் வார்த்தை. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய கல்லூரிகள்கூட, நூறு சதவீத வேலை வாய்ப்பைத் தர முடியாது என்பதே உண்மை.

வேலை என்பது ஒரு சம்பிரதாயமாக இருக்கக் கூடாது. சமுதாயத்தை மேம்படுத்த சவால்களை எதிர்கொள்ளும் வலிமை பெற்றவர்காக மாணவர்களை உருவாக்க வேண்டும்.

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து தாக்கல் செய்த அறிக்கையில், 22 சதவீத பொறியியல் கல்லூரிகள், தொழிற்சாலையுடன் தொடர்பு இல்லாமலேயே இருக்கின்றன. அவர்களது கல்வியானது, தொழிற்சாலை சாராத கல்வி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொறியியல் கல்லூரியில் சேரும் முன், அந்த கல்லூரி தொழிற்சாலையுடன் தொடர்பில் உள்ளதா? வேலை வாய்ப்பு எப்படி உள்ளது? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்த பின்பே சேரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.