சென்னை: நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில், மாணவ மாணகளின் தற்கொலை உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்று அதிகாலை மதுரை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில், மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருக சுந்தரம், இவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை, ஆனால் மாணவி தொடர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஜோதி ஸ்ரீ துர்கா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணி வரை தேர்வுக்கு படித்துள்ளர். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ‘நீட்’ கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என துணைமுதல்வர்  ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி, வாசன் உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

துணைமுதல்வர் ஓபிஎஸ்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஜோதி துர்கா மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மகளின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்கால தூண்களாகிய மாணவ செல்வங்களின் இதுபோன்ற விபரீத முடிவுகள் துயரத்தை அளிக்கிறது. மாணவச்செல்வங்கள் மனம்தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி! #NEET மாணவர் களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது. மீண்டும் சொல்கிறேன்;தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல!

பாமக தலைவர் ராமதாஸ்

உயிர்காக்கும் மருத்துவர்களை உருவாக்க கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட நீட் தேர்வு, இந்தியா வின் எதிர்காலத் தூண்களில் ஒருவராக வர வேண்டியவரின் உயிரைப் பறித்துள்ளது. நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்தவர்கள் தான் மாணவி மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட காரணத்திற் காக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் போது, அது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நீட் தேர்வுக்கு பலியாகியுள்ள நிலையில், குறைந்தபட்சம் அது குறித்து ஆய்வு செய்து, மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்ப தற்கு கூட மத்திய அரசு தயாராக இல்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மாணவர்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்

வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன்

வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மதுரையில் மாணவி ஜோதி துர்கா நீட் தேர்வுக்குத் தயாராகி கொண்டு இருந்த நேரத்தில் தாம் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் மன உளச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனைக்குரியது வருந்தத்தக்கது.

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த எலந்தங்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் தோல்வி பயத்தால் ஒரிரு நாள்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட வடு ஆறுவதற்கு முன் மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டு இருப்பது மிகவும் வேதனைக்குரியது. மாணவ, மாணவியின் பெற்றோர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நாளை தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் மன உளச்சலுக்கு ஆளாகாமல் பயத்தை விடுத்து தைரியத்துடன் தேர்வு எழுதுங்கள்; உங்கள் லட்சியம், கனவுகள் நிறைவேறும்”

இவ்வாறு கூறியுள்ளனர்.