அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Must read

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில், 1, 6, 9, 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் திறக்க இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத நிலையில், மாணவர் சேர்க்கை குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,  1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு வரும் 17ந்தேதி முதல் மாணவர் சேர்க்க நடத்த உத்தரவிட்டுள்ளது. அதற்கான நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை யும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான (2 முதல் 10-ம் வகுப்பு) மாணவர் சேர்க்கையும் வருகிற 17-ந்தேதி முதல் நடைபெற இருப்பதாகவும், அதேபோல், மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு மாணவர்சேர்க்கை வருகிற 24-ந்தேதி முதல் நடைபெற இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அரசின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த மாணவர் சேர்க்கை செய்யவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் புதிய சேர்க்கை செய்யும் நாளில் மாணவர்களுக்குரிய விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, சீருடை மற்றும் இதர கல்விசார் பொருட்களை வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேபோல், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடுக்கான சேர்க்கைக்கு மெட்ரி குலேசன் பள்ளிகள் இயக்குனருக்கு அனுமதி வழங்கியும் அரசு ஆணையிடுகிறது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையின்போது பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் வருமாறு:-

5 மற்றும் 8-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் (டி.சி.) வழங்க தேவையான நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுத்து, மாற்றுச் சான்றிதழ்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி, சமூக இடைவெளியை பின்பற்றி மாற்றுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களுடைய ஊட்டுப்பள்ளிகளில் (பீடர் ஸ்கூல்) 5, 8-ம் வகுப்பு படித்த மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்கள், வீட்டு முகவரியை பெற்று 6, 9-ம் வகுப்புகளில் குறிப்பிட்ட நாட்களில் சேர்க்கை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதிக மாணவர்கள் இருந்தால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலையில் தலா 20 மாணவர்கள், பெற்றோரை அழைத்து மாணவர் சேர்க்கை செய்திடவேண்டும். அதற்கேற்ப கூடுதல் நாட்களையும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம்.

More articles

Latest article