கோவை:

சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என கர்ணன் கூறினார்.

கோர்ட் அவமதிப்பு வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் இன்று மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவை மதுக்கரை அருகே மச்சநாயக்கன் பாளையத்தில் உள்ள எலைட்கார்டன் எனும் தனியாருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார் கர்ணன்.

இவருக்கு யாரேனும் உதவி செய்தார்களா அல்லது தனது சொந்த செலவில் தங்கியிருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இவருடைய செல்போன் சிக்னலை வைத்து கொல்கத்தா போலீசார், உள்ளூர் போலீசாரின் உதவியுடன். கர்ணன் தங்கியிருந்த இடத்திற்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கோவையில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் விமான நிலையத்திற்கு போலீசாரல் அழைத்து வரப்பட்டார். கைதான கர்ணன் மேற்குவங்க போலீசாருடன் வாக்குவாதம் செய்து ஒத்துழைக்க மறுத்தார்.

பின்னர் அவர் கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘‘என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்னை கைது செய்ததில் காவல்துறை மீது எந்த குறைபாடும் சொல்ல முடியாது. சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நீதித்துறையில் ஊழலும், சாதியமும் நிறைந்துள்ளது’’ என்றார்.