சென்னை: தமிழ்நாட்டில் கருக்கலைப்பு மற்றும் அடிமைப்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றியோ, மருந்து சீட்டு இல்லாமலோ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கடைகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945இன் படி குற்றம் என குறிப்பிட்டுள்ளது.

 கருக்கலைப்பு மாத்திரைகள், மக்களுக்கு அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை/ விநியோகம் செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945இன் படி குற்றமாகும்.

தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் கீழ் விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த ஆறு மாதங்களில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்த 6 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்துறை மூலம் இனி வருங்காலங்களிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.