பீமனின் கர்வம் தீர்ந்தது எப்படி?
தன்னுடைய பலத்தைப் பற்றி பீமனுக்கு அதீத கர்வம் இருந்தது.  வனவாசத்தின்போது, பாண்டவர்கள் கந்தமாத பர்வதத்தின் பக்கத்தில் தங்கி இருந்தார்கள். அந்த மலைப் பிரதேசத்தில் இருந்து கீழ்நோக்கிக் காற்று வீச, ஆயிரம் இதழ்கள் உள்ளதும், மிக்க வாசனையுள்ளதுமான, சௌகந்தி என்று அழைக்கப்படும் ஒரு அழகிய தாமரை மலர் திரௌபதிக்குப் பக்கத்தில் வந்து விழுந்தது. அந்த மலரைக் கண்டதும், அவள் அதன் அற்புத அழகிலும்,சுகந்தத்திலும் மயங்கி, பீமனைப் பார்த்து, “இதைப் போன்ற இன்னொரு மலர் எனக்கு வேண்டுமே” என்று கேட்க, உடனே
பீமன் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, அந்த கந்தமாத மலையின் மீது ஏறத் தொடங்கினான்.
அவனுக்கு இருந்த பராக்கிரமத்தில் சிம்மம் போல கர்ஜித்துக் கொண்டே போகலானான்.
அந்த கர்ஜனையைக் கேட்டு காட்டு மிருகங்கள் குலைநடுங்கின.பறவைகள் பதறி கூடுகளை விட்டு வெளியேறின. தாக்க வந்த சிங்கங்களையும் யானைகளையும் அவற்றின் வாலைப் பிடித்துத் தூக்கி எறிந்துகொண்டே மலைமீது ஏறிச்சென்றான். வழியில் இருந்த அழகிய தடாகத்தில் நீந்தி விளையாடி விட்டு, ஒரு பெரிய வாழைத் தோப்பை அடைந்தான்.
அங்கு வசித்து வந்த வாயு புத்திரன் ஹனுமன் தன் தம்பி பீமனைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். அதே சமயம் அவன் கர்வம் மிகுதியால் ஆட்டம் போடுகிறான் என்பதை உணர்ந்து, அவனுக்கு தக்க பாடம் புகட்ட எண்ணுகிறார். அதுமட்டுமல்ல, அங்கு வசிக்கும் பெரும் தபஸ்விகளின் சாபத்திற்கு அவன் உள்ளாகக் கூடாதே என்ற அக்கறையில் அவனைத் தடுத்து நிறுத்த நினைத்தார். எனவே அவன் வரும் வழியில் குறுக்காக தன் வாலை நீட்டி,கண்களை மூடிக் கொண்டு தூங்குவது போல் கிடந்தார்.
பாதையின் குறுக்கே படுத்துக்கிடந்த குரங்கைக் கண்டு அசூசை அடைந்த பீமன், “வழியை விட்டு அப்பால் போ” என்று கர்ஜித்தான். கண்விழித்த ஹனுமன், “தம்பி நான் வியாதியஸ்தன், வயோதிகன். ஏன் இப்படி சப்தம் போட்டு என்னை எழுப்பி விட்டாய்? மனிதனாகிய நீ பிராணிகளிடம் தயை காட்ட வேண்டாமா? ஆமாம் நீ யார், எதற்காக இங்கு வந்தாய்?
பீமன் தான் யார் என்பதையும் எதற்காக அங்கு வந்தான் என்பதையும் கூறிவிட்டு, ” சரி வாலை நகர்த்திக் கொண்டு எனக்கு வழிவிடப் போகிறாயா,இல்லையா?” என்று அதட்டினான்.
“அப்பனே,நான் தான் சொன்னேனே, நான் வியாதியஸ்தன் என்று. நீ போகத்தான் வேண்டுமென்றால் என் வாலைத் தாண்டிக் கொண்டு போயேன்!”
“ஏ..குரங்கே! நான் சாஸ்திரங்களைப் கற்றவன். எல்லா ஜீவராசிகளிலும் பகவான் இருக்கிறார். அதனால் உன்னைத் தாண்டிச் செல்வது பகவானை அவமதிப்பது போல் ஆகிவிடும். நீயாக விலகி விடு. இல்லையேல் என் பலத்தைப் பிரயோகிக்க வேண்டியிருக்கும்!
“நான் தான் சொன்னேனே, வயோதிகத்தால் சக்தியற்று இருக்கிறேன். தாண்டிப்போக விருப்பம் இல்லையென்றால் என் வாலைத் தூக்கி அப்பால் வைத்துவிட்டுப் போயேன்!”
கிழட்டுக்குரங்குக்கு இத்தனை திமிரா என்று நினைத்த பீமன், இடது கையால் தூக்கப் போய், அதை அசைக்கக்கூட முடியாமல், இரு கைகளாலும் எடுக்கப் பார்த்து, விரல்கள் நசுங்கினவேயொழிய வால் ஒரு துளி கூட அசைந்தபாடில்லை.
அவனது பிரம்மபிரயத்தனத்தினால், வேர்த்து விறுவிறுத்துப் போனான். வெட்கத்தினால் தலைகவிழ்ந்த பீமன், சாஷ்டாங்கமாக குரங்கின் காலில் விழுந்து, “ஐயனே தாங்கள் யார் என்று உணர முடியவில்லையே! மரியாதைக் குறைவாக பேசிய என்னை பெரிதும் மன்னிக்க வேண்டும்” என்று மன்றாட, ஹனுமன் தன் சுய உருவைக் காட்டி,
“தம்பி! சஞ்சலம் வேண்டாம். நான் உன் அண்ணன் ஹனுமன் தான்!” என்று கூறியபடி பீமனை வாரி எடுத்து அணைத்துக் கொண்டார்.
பிறகு அந்த சௌகந்தி மலர் இருக்குமிடத்தை சொல்லி,” பீமா! நீ எந்தவிதத்திலும் யாருக்கும் துஷ்டனாக இருக்கக் கூடாது,இந்த மாபெரும் அண்டபேரண்டத்தில் உன் இருப்பு என்ன என்பதை நீ உணர்ந்தால் அகங்காரம் அறவே அற்றுப்போகும்” என எடுத்துக் கூற, பீமனும் அன்றிலிருந்து கர்வத்தையும் உருவு கண்டு எள்ளுதலையும் அடியோடு விடுத்தான்.