கொழும்பு: கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதுரும் திருப்பி தர முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறி உள்ளார்.
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு கச்சத்தீவு பிரச்சினையும் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தமிழக மீனவர்கள கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவம், தமிழர்களை கைது செய்வதும், மீனவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜூன் 18 முதல் செப்டம்பர் 4 -ஆம் தேதி வரை மீன்பிடிக்க சென்ற மீனவர்களில்,160-க்கு அதிகமான மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசின் அடாவடியை கண்டித்து, தமிழக மீனவர்கள் பல முறை போராட்டம் நடத்தி வருவதுடன், கச்சத்தீவை இலங்கையிடம் இரந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவின், குறிப்பாக தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில், அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அனுமதியுடன், இலங்கையிடம் இந்தியா தாரைவார்த்தது.
இதன் பயனை இன்று தமிழக மீனவர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தேர்தல் காலங்களிலும், மீனவர்கள் கைது செய்யப்படும்போதும் அவ்வப்போது வெளியே வரும், பின்னர் காணாமல் போகும், கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கையிலெடுத்த பாஜக கடுமையாக விமர்சித்தது. இருந்தாலும் இதுவரை அதை மீட்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில், இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு கச்சத்தீவு பிரச்சினையும் பேசும்பொருளாக மாறி வருகிறது. தற்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அதில், “கச்சத்தீவு பற்றிய பேச்சுவார்த்தைக்கு இலங்கை தயார் இல்லை. இந்தியாவுக்கு எப்படி காஷ்மீரோ, அப்படித்தான் இலங்கைக்கு கச்சத்தீவு. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எப்படி சமரசமும் செய்து கொள்ளாமல் இருக்கிறதோ, அதே நிலைப்பாடு தான் கச்சத்தீவில் இலங்கையும் கடைபிடிக்கிறது. காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என எப்படி நீங்கள் கூறுகிறீர்களோ, அதே நிலைப்பாட்டைதான் கச்சத்தீவு விஷயத்தில் நாங்கள் கொண்டுள்ளோம்.
கச்சத்தீவு மீட்பு, மீண்டும் இந்தியாவோடு இணையும் என்பதெல்லாம் வெறும் மீடியா ஹைப். இந்தியாவிலேயே தமிழகத்தை தவிர்த்து உ.பி. ம.பி. போன்ற பிற மாநிலங்களில் கூட கச்சத்தீவு பற்றி பேசுகிறார்களா?. கச்சத்தீவு என்பது தமிழகத்தின் ஒரு பகுதியின் பிரச்சினை மட்டுமே.
இவ்வாறு கூறி உள்ளார்.