சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் சிங்கார சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடி மதிப்பீட்டில் 1,033 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது, 118-வது வார்டில் கத்தீட்ரல் சாலையில் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் 900 மீ. நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, 169 வார்டில் மாம்பலம் கால்வாய் வழியாக மழைநீர் அடையாற்றில் சென்று சேரும் இடத்தில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக மழைநீர் செல்லும் பாதையை தொழில்நுட்ப கூறுகளை கருத்தில் கொண்டு மாற்றி அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், 133-வது வார்டில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 7.1 கி.மீ. நிளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் பசுல்லா சாலை, சுப்ரமணிய நகர், ரங்கராஜபுரம் மேம்பாலம், மழைநீர் வடிகாலை ரயில்வே குறுக்கு பாலத்துடன் இணைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து 135-வது வார்டில் ரூ.6.8 கோடி மதிப்பீட்டில் 2.09 கி.மீ நீளத்திற்கு 18வது அவென்யூ கண்ணப்பர் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பணி ஆணையில் குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்றும், நாள்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய நீளத்திற்கு இலக்கு நிர்ணயித்து பணி விவரத்தினை ஆணையருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு. கட்டுமானம் தொடங்கி மழைநீர் வடிகாலில் நீர் முறையாக செல்வது வரை உறுதி செய்ய செய்யவேண்டும்-மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.