சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக் விழா நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னதாக இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக  முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

‘மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெற்றதில்லை. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கப்படுகின்றன. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளில் இருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

பல்வேறு நாடுகளின் போட்டிகளுக்கு இடையே இந்தியா முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. இதனி டையே செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க  தமிழகஅரசு ரூ. 92.13 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான நிா்வாக ஒப்புதலைத் தமிழக அரசு அரசு வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு துறைகள் சார்பில் புனரமைப்பு பணிகள் மூலம் மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மாமல்லபுரம் பேரூராட்சியை ரூ. 7கோடியே 90 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மூலம் அழகுபடுத்த திட்டமிடப் பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  பேரூராட்சியில் பழுதடைந்த சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள், பவர் பிளாக் சாலைகள் பவர் பிளாக் நடைபாதைகள் அமைப்பது, மேலும் பொய்கைக் குளம் சீரமைத்தல் தேவனேரி – ஈசிஆர் சந்திப்பில் பூங்கா அமைத்தல், ஈசிஆர் – கோவளம் சந்திப்பில் சாலையோர பூங்கா, கடற்கரை அருகில் திருவள்ளூர் சிலை பூங்கா மேம்பாடு செய்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன. ட முக்கிய 15 இடங்களில் நூறு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவுள்ளன. கழிப்பறை வசதி ஏற்படுத்தவும், 10 இடங்களில் தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து தெருக்களுக்கும் தெரு பெயர் பலகை வைத்தல், நகரம் முழுவதும் உள்ள அனைத்து சாலையிலும் பக்கவாட்டு சுவர்களில் உள்ள விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை அப்புறப்படுத்தி, வர்ணம் அடித்து வாசகம் மற்றும் ஓவியம் வரையவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி பகுதியில் உள்ள 5 பேருந்து நிழற்குடைகள் மேம்பாடு செய்யப்படவுள்ளன.

இதைத்தொடர்ந்து, மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு இதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை நடத்துவதென முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 28, இரவு 7 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நேரு உள்விளையாட்டு அரங்குக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.