சென்னை: விவசாயிகள் பாடுபட்டு அறுவடை செய்யும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுங்கள் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சூமோட்டோ வழக்காக பதிவு செய்து விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம்,  நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெல்கள் விளைந்து, அறுவடை செய்து, அதை விற்பனை செய்வதற்காக, அரசின் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் அரசு கொள்முதல் செய்யாததால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் எதிர்பாராதவிதமாக ஏற்படும் இயற்கை பேரிடராலும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. கடந்த வாரம் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக,  கொள்முதல்  நிலையங்களில் விவசாயிகள் சேமித்து வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து வீணானது., இதனால் விவசாயகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், ஊடங்களிலும் வெளியானது.

செய்திகளின்  அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து,  தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மழை நீரில் நெல் வீணாவதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும், இல்லாவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காய வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட நெல் மழையில் நனைந்துள்ளதாகவும், இதுசம்பந்தமான முழு விவரங்களைப் பெற்று தெரிவிப்பதாகவும் கூறினார். அதையடுத்து, இதுகுறித்து, தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்ட  நீதிபதிகள், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனக் கூறி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.