டில்லி:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு  பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி பகுதி மக்களின் வாழ்வாரத்தை கெடுத்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடை பெற்ற போராட்டத்தின்போது, காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து,   ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு  சீல் வைத்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்கலாம் என உத்தரவிட்டது.

இது தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அறிவித்தது. தொடர்ந்து, தமிழக அரசின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை  விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாக பணிகளுக்காக  மீண்டும் திறக்கலாம் என்றும், ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்கவும்  உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் விரிவான தீர்ப்பு 29ந்தேதி வழங்கப்படும் என அறிவித்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 29ந்தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, ஆலையை திறக்க முடியாது என்று வாதிடப்பட்டது.

கடந்த 3 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 5ந்தேதி நடைபெறும் என்று அறிவித்த உச்சநீதி மன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.