download (1)

சென்னை:
மிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களான அசோகன், கார்த்தி ஆகியோர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த கோபி என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்த போலீசார், இதே புகாரை 81 பேர் அளித்துள்ளதாகவும், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மீதான புகாரில் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டுமே  காவல்துறையினர் விசாரிப்பதாக புகார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘இந்த வழக்கில் போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும்:  வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் யாருக்கு சென்றது என்பதை கண்டிறிய மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் தீவிர விசாரணை நடத்தவும், அதனை துணை ஆணையர் கண்காணிக்க வேண்டும்’ என்று நீதிபதி  உத்தரவிட்டார்.