சென்னை: தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துகொண்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் அவர்  டெபாசிட் கூட பெற முடியவில்லை.
அதேபோல் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்தது.
download
இந்த நிலையில், வரும் உள்ளாட்சி தேர்தலை தமாகா தனித்து போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே போல, “வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்” என்று  அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் தருமபுரியில் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, “தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொண்டது. கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவது அவர்களது உரிமை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மக்கள் நலக் கூட்டணி வலுவுடன் தொடரும். இக் கூட்டணியில் உள்ள  மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை இணைந்து சந்திக்கும்” என்றார்.