டெல்லி: நிவர் புயலின் போது வெளியில் இல்லாமல் வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார்.

வங்கக்கடலில் நிலை கொண்டு இருக்கும் நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடையும் என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. புயல் அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அரசும், புதுச்சேரி அரசும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந் நிலையில், நிவர் புயலின் போது வெளியில் இல்லாமல் வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறி உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளதாவது: நிவர் புயலானது தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் சில பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆகவே, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

தேவைப்படுவர்களுக்கு வேண்டிய உதவி வழங்குமாறு அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக் கொள்கிறேன். வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.