டில்லி:

இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகளை 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்ப ஸ்டார் நிறுவனம் 6,138.1 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் வரை உள்ளூரில் இந்திய அணி விளையாடும் கிரி க்கெட் போட்டிகளை டிவியில் நேரடி ஒளிபரப்பு உரிமம் பெற முதல் முறையாக ஆன்-லைனில் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 102 சர்வதேச போட்டிகள் இந்தியாவில் நடக்க இருக்கிறது.

ஆன்-லைன் ஏலத்தில் ஸ்டார் குழுமம், சோனி, ஜியோ ஆகிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதி கட்டத்தில் ஸ்டார் குழுமம், சோனிக்கிடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா ரூ. 6138.1 கோடிக்கு உரிமத்தை பெற்றது. இதன் மூலம் ஒரு போட்டிக்கு சராசரியாக 60.1 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது.

இதற்கு முந்தைய 5 ஆண்டு டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் நிறுவனம் ரூ. 3,851 கோடிக்கு ஏலம் எ டுத்திருந்தது. தற்போது சுமார் 2,300 கோடி ரூபாய் கூடுதலாக ஏலம் எடுத்துள்ளது. இது 59 சதவீதம் அதிகமாகும்.

ஏற்கனவே 2018-2022ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் ரூ.16,347.5 கோடிக்கு எடுத்துள்ளது. அதேபோல் 2015-23ம் ஆண்டு வரையிலான சர்வதேச போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையையும் 100.9 கோடி டாலருக்கு ஏலம் எடுத்துள்ளது.