சிட்னி:

கேப்டவுனில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பந்து சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டேவிட் வார்னர் உள்பட 3 பேர் சிக்கினர். இதையடுத்து முன்னாள் துணை கேப்டனான டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பல்வேறு தண்டனைகளை விதித்தது.

ஒரு வருடத்திற்கு அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடக் கூடாது. எதிர்காலத்தில் அணி தலைமை பொறுப்புக்கு இவரது பெயரை பரிசீலனை செய்யக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த தண்டனைகளை ஏற்றுக் கொள்வதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘என் மீதான அனைத்து தண்டனைகளையும் ஏற்றுக் கொள்கிறேன். எனது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த நபராக, அணி உறுப்பினராக, சிறந்த முன் உதாரணமாக திகழ இனிமேல் செயல்படுவேன்’’ என்றார்.

முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கபோவதில்லை என்று இக்குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கேமரான் பான்கிராப்ட ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து வார்னரும் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.