சேலம்:
சேலம் ஆத்தூர் அருகே தலைவாசலில் புதியதாக அமைக்கப்பட்ட கால்நடை பூங்காவைக் கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வைத் தடுக்கும் வகையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புவதாகக் கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா தெரிவித்து உள்ளார்.

சேலம் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப் பெரிய அளவில் கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த கால்நடை பூங்கா, ஆராய்ச்சி நிலையத்தை மீன்வளம், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பிறகு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அமைச்சர் அனிதா கூறியதாவது:
உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையமாகத் தலைவாசல் கால்நடைப்பூங்கா உள்ளது. 2022ஆம் ஆண்டில் தலைவாசல் கால்நடை பூங்கா பணிகள் முழுமையாக நிறைவடையும். பணிகள் நிறைவடைந்தவுடன் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் இங்குச் செயல்படும்.

இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதிய வேலைவாய்ப்புக்காகத் தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் தனிமனிதனாக ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருவரும் உயரும் வகையில் கால்நடை வளர்ப்பு இந்த பூங்கா மூலம் ஊக்கப் படுத்தப்படும். வெளிநாட்டிலிருந்து மாணவர்கள் இங்கு கல்வி பயிலும் வாய்ப்பும் உருவாக்கப்படும். தலைவாசல் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அமைப்பதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படும்.

பல்லுயிர் பெருக்கம் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை ஆய்வாளர்கள் தங்கும் வசதி என அனைத்து பணிகளும் ஓராண்டிற்குள் முழு அளவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும். இங்குச் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த கல்வி ஆண்டில் இந்த எண்ணிக்கை 80 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன் வளத்தில் தமிழ்நாடு முதலிடத்திலிருந்த நிலை மாறி தற்போது ஐந்தாம் இடத்தில் உள்ளது. மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அண்டை மாநிலமான ஆந்திராவில் நன்னீர் மீன் வளர்ப்பினை மேற்கொண்டு வருகின்றனர். வயல்களில் நெல்லை விளைவிப்பது போல மீன்களை உருவாக்கும் வகையில் வெளிநாட்டில் இருப்பதைப்போல மீன் வளர்ப்பு ஊக்கப் படுத்தப்படும். தற்போது வயல்களில் மீன் வளர்ப்பதற்குச் சுற்றுச்சூழல் பிரச்சினை இருப்பதாகக் கூறுவதால் அதற்குத் தீர்வு கண்டு மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படும்போது அவர்களைக் காக்கப் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உள்துறை அதிகாரிகளுடன் பேசி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புகிறார். இந்த நிகழ்வு விரைவில் நடைபெறும்.

கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பாக புதிய அறிவிப்புகளை வரும் சட்டசபை கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் அறிவிப்பார்.
இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். இந்த ஆய்வில் துறைச் செயலாளர் ஜவகர், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.