சென்னை:

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்கு வரவேற்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வைகோ அறிவிப்பு வெளியிட்டதற்கு, முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்து உள்ளார். மேலும், பாஜக, தனது டிவிட்டர் பக்கத்திலும் பாராட்டு தெரிவித்து உள்ளது.

புராதன நகரமான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு வரும் 11ந்தேதி முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள, தமிழக அரசு சார்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளத.  ஆனால் ஸ்டாலின் இதில் கலந்து கொள்வது இன்னும்  உறுதியாகவில்லை.

இதற்கிடையில்,  மோடி – ஜின்பிங் சந்திப்பு தொடர்பாக  ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,  இந்தியத் திருநாட்டைப் போலவே, மிகப் பண்டைய பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டதும், மிக நீண்ட நிலப் பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீன தேசத்தின் அதிபர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜி ஜின்பிங் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன் என வரவேற்றிருந்தார்.

அதுபோல, வைகோவும், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை வரவேற்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் செய்தியார்களை சந்தித்த தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னார், ஸ்டாலின், வைகோவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

அதுபோல, பாஜக டிவிட்டர் பக்கத்திலும், மோடி – ஜின்பிங் சந்திப்பு விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், எப்போதும் இதுபோல ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் என்று  பாராட்டு தெரிவித்துள்ளது.