நான் கிராமத்தான், என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஸ்டாலினுக்கு நினைப்பு! முதல்வர் பழனிசாமி காட்டம்…

Must read

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம்  அருகே வனவாசியில் அ  ரூ.292 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்த அவர், ரூ.118.93 கோடியில் 44 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசினார்.

ஸ்டாலினுக்கு நாள்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும் என்றும், பழனிசாமி கிராமத்திலிருந்து வந்திருக்கிறார், இவரால் ஒன்று செய்ய முடியாது என்று நினைத்தார், ஆனால், தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது, எதிர்க்கட்சிகள் மக்கள் நலனோடு செயல்பட வேண்டும் என காட்டமாக கூறினார்.

சேலத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பின் பேசிய முதல்வர் பழனிசாமி, பேசியதாவது,

நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டதன் விளைவாக 2019-2020ல் இந்திய அளவிலே தேசிய விருதைப் பெற்றிருக்கின்றோம். இந்தத் துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்த அரசு எங்களுடைய அரசு என்பதை பெருமிதத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக, ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் அனைத்து தூர்வாரப்பட்டன, கால்வாய்கள் நவீனமாக்கப்பட்டன.

‘மருத்துவப்படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசு மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனோடு செயல்பட வேண்டும், அரசியலோடு செயல்படக் கூடாது.

கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைந்து வருகிறது. ஸ்டாலினுக்கு நாள்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும்.தமிழகம் முதலிடத்தில் இருப்பது பொறுக்க முடியாமல் ரூமில் உட்கார்ந்து ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம்’.  நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய எந்தக் காலத்திலும் உங்களுடைய கட்சியும் வராது, உங்களுடைய ஆட்சியையும் மக்கள் கண்டது கிடையாது என முதல்வர் பேசினார்.

நீரை சிக்கனமாக பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்தோம். அதன் மூலமாக, என்றைக்கும் இல்லாத அளவிற்கு இன்றைக்கு டெல்டா மாவட்டப் பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையத்தில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சரித்திர சாதனையை தமிழக அரசு படைத்திருக்கின்றது.

கடந்த காலங்களில் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்தார்கள். 23 லட்சம் மெட்ரிக் டன் எங்கே? 32 லட்சம் மெட்ரிக் டன் எங்கே? ஆகவே, அரசு எந்த அளவிற்கு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதேபோல, இன்றைக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு, டெல்லியை பார், கேரளாவை பார் என்று குறை சொன்னார்கள். இப்பொழுது நீங்கள் டெல்லியையும், கேரளாவையும் பாருங்கள். ஆனால், இப்பொழுது பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறதென்றும், கேரளாவிலும், டெல்லியிலும் குறைந்திருக்கிறதென்றும் அன்றையதினம் சொன்னார்கள்.

இன்றைக்கு அந்த இடங்களில் அதிகமாகியிருக்கிறது. தமிழக அரசு சரியான முறையில் நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால், கொரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, படிப்படியாக குறைந்து கொண்டிருக்கின்றது. மற்ற மாநிலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் குறைந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு படிப்படியாக வேளாண் பணிகள் 100 சதவீதம் நடைபெற்று வருகிறது.

தொழிற்சாலைகளும் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. படிப்படியாக இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதற்கு பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தினந்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கமே வரும். முதலில், இந்த ஆட்சி ஒரு வாரம்கூட தாங்காது, ஒரு மாதம் தாங்காது, 6 மாதம் தாங்காது, ஒரு வருடம் தாங்காது என்று சொன்னார். இப்பொழுது, மூன்றாண்டுகள் நிறைவு பெற்று நான்காவது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதிமுக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் GDP 8 சதவிகிதம் இருக்கிறது, வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. கரோனா வைரஸ் தொற்று இருக்கின்ற காலகட்டத்தில் கூட, புதிய, புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வருகிறது. கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்ட மார்ச் மாதம் முதல் இப்பொழுது வரை அதிகமான தொழிற்சாலைகள் துவங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

வேளாண்மையில் முதலிடம், தொழிற்சாலைகள் துவங்குவதில் முதலிடம், சுகாதாரத் துறையில் முதலிடம், கல்வியில் முதலிடம் என எல்லாவற்றிலும் முதலிடத்தில் தமிழ்நாடு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஸ்டாலினால் இதனை பொறுக்க முடியவில்லை. ஏதோ பழனிசாமி கிராமத்திலிருந்து வந்திருக்கிறார், இவரால் ஒன்று செய்ய முடியாது என்று நினைத்தார். அனைத்து துறைகளிலும் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறோம்.

தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். வேண்டுமென்றே திட்டமிட்டு தினந்தோறும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறையில் இருந்துகொண்டே ஏதாவது ஒரு அறிக்கை விடுகிறார். ஒரு நாளாவது வெளியில் வந்திருக்கிறாரா? அறையில் இருக்கும்போதுகூட, கையில் உறை, கண்ணாடி அணிந்து கொண்டுதான் இருக்கிறார். அங்கு என்ன வைரஸா வரப் போகிறது? அவர் ஒருவர்தான் தனியாக இருக்கிறார். இங்கே கூட நாம் எல்லாம் இருக்கிறோம். ஆகவே, நாட்டு மக்களுக்கு உழைக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக, ஒரே அரசு அதிமுக அரசு.

தமிழ்நாடு முழுவதும் 4 மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று, மாவட்டங்களில் என்னென்ன வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவிற்கு நடைபெற்றிருக்கின்றது போன்ற விவரங்களை கேட்டறிந்தேன்.

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகளில், மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய்த் துறை போன்ற துறைகள் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற விவரத்தை ஆய்வு செய்து, இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தி, ஆலோசனைகள் வழங்கியதன் விளைவாக இன்றைக்கு தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, குறைந்திருக்கிறது.

வேண்டுமென்றே தினந்தோறும் அறிக்கை விட்டு அறிக்கை நாயகனாக வேண்டுமானால் ஸ்டாலின் திகழலாமேயொழிய, நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய எந்தக் காலத்திலும் உங்களுடைய கட்சியும் வராது, உங்களுடைய ஆட்சியையும் மக்கள் கண்டது கிடையாது. திமுக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? ஆனால், நாங்கள் எவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம், நாட்டு மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன போன்றவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேண்டுமென்றே அரசின் மீது பழி சுமத்துவது, அமைச்சர்கள் மீது பொய்யான, அவதூறான செய்திகளை பத்திரிகையில் வெளியிடுவது, இதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களுக்குச் சொல்லுங்கள். அதன் மூலமாக எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர்வதற்கு முயற்சி செய்யுங்கள்’.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

More articles

Latest article