வாணியம்பாடி: வாணியம்பாடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவாக வீதி வீதியாக நடந்துசென்று வாக்கு சேகரித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் என். முகமது நயீம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜி. செந்தில்குமார் போட்டியிடுகிறார். அமமுக கூட்டணி சார்பில் ஓவைசி கட்சி வேட்பாளராக வக்கீல் அகமது போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக ஞானதாஸ் என்பவரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தேவேந்திரன் என்பவரும் போட்டியிடுகின்றனர். அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் தோழமை கட்சி வேட்பாளரான என். முகமது நயீம்-ஐ ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். வாணியம்பாடி பேருந்து நிலையம், சி.எல்.சாலை, உழவர் சந்தை, ஜின்னாசாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் சென்ற பகுதிகளில் எல்லாம் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஸ்டாலின் நடந்து வந்து வாக்கு சேகரித்ததை கண்ட பொதுமக்கள், இளம்பெண்கள் உள்பட பலரும், அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும் என்றும், வேளாண் சட்டத்தை தமிழகத்தில் னுமதிக்க மாட்டோம் என்றார்.
மேலும், விவசாயிகளின் நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும், கரும்புக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது அவை நிறைவேற்றப் படும் என்றவர், நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசியவர், ஜூன் 3 திமுக தலைவர் பிறந்த நாளன்று வழங்குவோம் கொரானா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கப்படும் என்று கூறியவர், திருப்பத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்படும், நாட்றம்பள்ளி மற்றும் மல்லகுண்ட பகுதியில் தொழிற்பேட்டை கொண்டுவரப்படும், நீர் நிலைகளை பராமரிக்க 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றவர், மஞ்சுவிரட்டு போட்டிக்கு தடையில்லாச் சான்று வழங்கப்படும்.