கோவை: பசும்பொன் தேவர் சமாதிக்கு சென்று திமுக தலைவர் ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட திருநீரை அணிய மறுத்து கீழே வீசியது தொடர்பான வீடியோ வைரலானது. இது தேவர் சமுதாய மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று கருணாஸ் எம்எல்ஏ போர்க்கொடி தூக்கி உள்ளார்.

கடந்த வாரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள சென்ற ஸ்டாலினுக்கு, அங்கு அனைவருக்கும் வழங்கப்படுவது போல திருநீறு கொடுக்கப்பட்டது. அதை நெற்றில் பூசுவதற்கு பதிலாக அவர் கீழே போட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுக மீது வேறுவாரி பூசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்ளை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ, ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

1968ல் குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசுகையில் அதை ஏற்றுக்கொண்டதுடன், மரியாதை செலுத்தியதை அவமதிப்பது நாகரிகமாக இருக்காது என பெரியார் கூறினார். திராவிடர் கழகத்தின் வழியில் வந்த அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் ஒரு நாத்திகராக இருக்க வேண்டும் இல்லை ஆத்திகராக இருக்க வேண்டும். தேர்தல் நேரங்களில் எடுக்கக்கூடிய ஆரத்தி மற்றும் வைக்கக்கூடிய திருநீறுகளையும், இஸ்லாமியர்கள் அணிவிக்கும் புனிதமான குல்லாவையும் அவர் ஏற்றுக்கொள்ளும் போது திருநீறை உதாசீனப்படுத்தி பசும்பொன்முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்திவிட்டார்.

இதற்கு உடனடியாக மு.க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு சடங்கு உள்ளதை ஏற்றுக் கொள்பவராகவும், பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்பவராக மு.க ஸ்டாலின் இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னுக்கு சென்ற ஸ்டாலினுக்கு எதிராக டிவிட்டர் வலைதளத்தில  #Gobackstalin ஹேஸ்டேக் வைரலான நிலையில், திருநீறு பூச மறுத்த ஸ்டாலினின் நடவடிக்கையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பதுடன், தேவர் சமுதாய மக்களிடையே திமுக மீதான அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.

ஸ்டாலினின் இந்த நடத்தை தேவரையும், தேவ சமூகத்தினரையும் அவமரியாதை செய்ததுபோல் உள்ளதாக பலரும் குற்றம் சாட்டும் நிலையில், தேவர் அமைப்புகள் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக், தென்நாடு மக்கள் கட்சி, தமிழ்நாடு மூவேந்தர் பண்பாட்டுக்கழகம், அப்பநாடு மறவர் சங்கம உள்ளிட்டவை ஸ்டாலினைக் கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.