சென்னை: பிரதமர் மோடிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதிய பல்துறை பிரமுகர்கள் 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளதோடு, மத்திய அரசுக்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்துங்கள் மற்றும் நாட்டின் ஜனநாயகத் தன்மைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமரைக் கேட்டுக்கொண்டு கடிதம் எழுதியது பெரிய குற்றமா?

இதற்காக பல்துறைகளில் புகழ்பெற்ற 49 பிரமுகர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு திமுக சார்பாக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். இத்தகைய சான்றோர்களை தேசத் துரோகிகள் என்று சொல்வதைவிட பேரபாயம் எதுவும் இருக்க முடியாது.

இது மிகவும் வ‍ெறுக்கத்தக்க ஒரு முன்னுதாரணம்.
இது எத்தகையக் கொடுமை? சட்டத்தின் ஆட்சிக்கு பா.ஜ. ஆட்சியில் இப்படி ஒரு சோதனையா? கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஏற்க முடியாது. இந்த நடவடிக்கை ஒவ்வொரு கு‍டிமகனின் மனதிலும் அச்சத்தை ஏற்படுத்துவதாகும். இதன்மூலம் அரசுக்கு எதிரான குரல்கள் நசுக்கப்படுகின்றன.

இப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களெல்லாம் கடந்த காலங்களில் படுதோல்வி அடைந்ததற்கான வரலாறுகள் உண்டு. இதை மத்திய அரசு உணர வேண்டும். மக்கள் விரும்பி அளித்த பெரும்பான்மையை திரும்ப எடுத்துக்கொள்ளும் அதிகாரமும் அவர்களிடமே இருக்கிறது.

எனவே, உடனடியாக இந்த தேசத்துரோக வழக்கினை திரும்பப் பெற்று, இந்திய ஜனநாயகத்தையும், அரசிய்ல சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.