சென்னை: ஷட்டில் நிறுவனம் சென்னையிலும் தனது சேவையைத் துவக்கியுள்ளது. இதன்மூலம் ஷட்டில் செயலியைப் பயன்படுத்தி நகருக்குள் பயணிக்க அந்நிறுவனத்தின் பேருந்து சேவையைப் பெறலாம்.

ஷட்டில் தனது சேவையைத் தொடங்கும் இந்தியாவின் ஆறாவது நகரம் சென்னையாகும். ஏற்கனவே, டெல்லி – என்சிஆர், கொல்கத்தா, புனே, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் ஷட்டில் போக்குவரத்து சேவை இயக்கப்படுகிறது.

இதன்மூலம் மோசமான போக்குவரத்து சூழல் கொண்ட சென்னை நகரில் நிலைமை சற்று மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷட்டில் சேவையானது தினமும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு சிறந்த வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கான இருக்கையை உறுதிசெய்து கொள்ளலாம்.

தற்போதைய நிலையில், சென்னையின் 20 வழித்தடங்களில், சுமார் 100 பேருந்துகளைக் கொண்டு, ஒரு நாளில் 2000 சவாரிகளை மேற்கொள்ளப்படுகின்றன.

அதிக கார்பன் வெளியீட்டில் பாதிக்கப்படும் 54 தெற்காசிய நகரங்களில் சென்னை ஐந்தாமிடத்தில் உள்ளது. இந்தியாவின் எந்த நகரத்தைவிடவும் இங்கு போக்குவரத்து நெருக்கடி அதிகம் என்றும், அதிக வாகனங்களைக் கையாளுவதற்கு தகுதியற்றதாக மோசமான சாலை உள்கட்டமைப்பைக் கொண்டது சென்னை நகரம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.