சென்னை:
சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, பெரியகருப்பன், ரங்கநாதன், கீதாஜீவன் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-
எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறது என  குற்றம் சாட்டினார். மேலும், சட்டசபை கூட்டத்தில் திமுக பங்கேற்க தயாராக இருந்தும் திட்டமிட்டு சபாநாயகர் சஸ்பென்ட் செய்ததாக மு.க. ஸ்டாலின் புகார் கூறினார்.
கேள்வி:- சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி தி.மு.க. சார்பில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டும் சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாத நிலையை எப்படி பார்க்கின்றீர்கள் ?
பதில்:- இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். அதனால் தான் நீதிமன்றத்தை நாங்கள் அணுகி இருக்கிறோம். இன்று நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறது என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
கேள்வி:- முதல்வர் பங்கேற்கும் மானியக் கோரிக்கையில் நீங்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா ?
பதில்:- நிச்சயமாக. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சட்டமன்றத்தில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நாங்கள் கலந்து கொண்டு பேசக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு சபையில் இருந்து வெளியேற்றினார்கள். சபை நடவடிக்கையில் கலந்து கொள்ளவிடாமல் சஸ்பெண்டு செய்தார்கள்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு சட்ட மன்றத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசும், பந்தோபஸ்துமே உதாரணம்.
கேள்வி:- ஊடகங்கள் மீது அடுத்தடுத்து அவதூறு வழக்கு பதிவு செய்யப்படுகிறதே?
பதில்:- ஊடகங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகள் போடப்படுகிறது. தமிழகத்தில் பலவித கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை மானியம் நடைபெறும் இன்றைக்கு கூட கோவில்களில், தனியார் நிறுவனங்களில் கொள்ளைகள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கேள்வி:- சட்டசபை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது குறித்து போராடுவீர்களா?
பதில்:- அதற்காக ஊடகத் துறையினர் தான் போராட வேண்டும். எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது சட்டமன்றத்தில் உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.